"முன்னாள் எம்.எல்.ஏ., உட்பட, அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல் நடத்திய தி.மு.க., பேரூராட்சி செயலர் ஜெகன் மற்றும் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட தி.மு.க.,வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் கூட நடத்த முடியாத அளவிற்கு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருணாநிதியின் தமிழின விரோதச் செயல்களை எடுத்துரைத்ததற்காக பழ.கருப்பையா தாக்கப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிவேல் பேச ஆரம்பித்த போது, எரியோடு பேரூராட்சி தி.மு.க., செயலர் ஜெகன் தலைமையில், 20 தி.மு.க., ரவுடிகள் அரிவாள், இரும்புக் கம்பி, சோடா பாட்டிலுடன் பொதுக்கூட்ட மேடையில் ஏறி, கட்சித் தொண்டர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த கொலை வெறித்தாக்குதல் குறித்து, 200 மீட்டர் தொலைவில் உள்ள காவல் நிலையத்தில், கட்சியினர் புகார் கொடுக்கச் சென்றால், ஒரு காவலாளி கூட அங்கு இல்லை. நடக்கும் அவலங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் பணியை செய்யும் கட்சியினருக்கு துணையாக என்றும் நான் இருப்பேன். கொலை வெறித்தாக்குதல் நடத்திய, எரியோடு பேரூராட்சி தி.மு.க., செயலர் ஜெகன் உட்பட இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் அறிக்கையில் கூறியுள்ளார்.