எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, March 22, 2010

விலை ஏற்றத்திற்கு கடத்தல், பதுக்கல் தான் காரணம்: அம்மா குற்றச்சாட்டு


சென்னை:'உணவுப் பொருட்களின் விலைகள் விஷம் போல் ஏறிக்கொண்டே இருப்பதற்கு, கடத்தல், பதுக்கல் தொழில்களை தி.மு.க., அரசு ஊக்குவிப்பது தான் காரணம்' என, அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:பட்ஜெட்டில் திட்ட மதிப்பீட்டில் உள்ளதை விட, திருத்திய மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை குறைந்திருந்தால், அதை தன்னுடைய அரசின் சாதனையாக கருணாநிதி சொல்வதில் தவறில்லை.திட்ட மதிப்பீட்டை விட திருத்திய மதிப்பீட்டில் கிட்டத்தட்ட ஐந்து மடங்கு அளவுக்கு வருவாய் பற்றாக்குறை உயர்ந்திருப்பதை, நடப்பாண்டு திட்ட மதிப்புடன் ஒப்பிட்டு வருவாய் பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது நகைப்புக்குரியது.

இதே போல், 2010-11ம் ஆண்டு திட்ட மதிப்பீட்டில் 3,396 கோடி ரூபாய் என்ற வருவாய் பற்றாக் குறை, திருத்திய மதிப்பீட்டில் 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்பதை சூசகமாக தெரியப்படுத்தி இருக்கிறார் முதல்வர் கருணாநிதி.கருணாநிதியின் நிர்வாகத் திறமையின்மைக்கு, இதை விட சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.கூடிய விரைவில் கருணாநிதியின் இந்தச் சாதனையை பாராட்டி, அவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விலைவாசி அதிகரிக்க ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செய்யப்படுகின்ற செயல்கள் தான் என்று கருணாநிதி கூறியிருக்கிறார்.

இத்திட்டங்கள் எல்லாம் எனது ஆட்சிக் காலத்திலும் செயல்படுத்தப்பட்டன. இதற்கும், விலைவாசி உயர்வுக்கும் என்ன சம்பந்தம்? பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வது போல கருணாநிதியின் விளக்கம் அமைந்திருக்கிறது.ரேஷன் கடைகளின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட் களான அரிசி, சர்க்கரை, பருப்பு வகைகள் எல்லாம் தி.மு.க.,வினரால் கடத்தப்படுகிறது; பதுக்கப்படுகிறது.விலைவாசி உயர்வு, மின் வெட்டு, சட்டம் - ஒழுங்கு சீரழிவு, வேலையில்லா திண்டாட்டம், தொழில் உற்பத்தி, நதி நீர் பங்கீடு போன்ற மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துமாறு, தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.

பொன் விளையும் நகரமாக பென்னாகரம் மாறும்:அம்மா பிரசாரம்


தர்மபுரி : ''பென்னாகரத்தை, 'பொன்' விளையும் நகரமாக மாற்ற அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுங்கள்,'' என, உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து அம்மா பிரசாரம் செய்தார்.

பென்னாகரம் தொகுதிக்கு உட்பட்ட குரும்பட்டியில் அ.தி.மு.க., வேட்பாளர் அன்பழகனை ஆதரித்து, டெம்போ டிராவலர் வேனில் அமர்ந்தபடி அம்மா பேசியதாவது: பென்னாகரம் அதிக கிராமங்கள் நிறைந்த தொகுதி. இங்கு அடிப்படை வசதிகள், மக்கள் நலத்திட்டங்கள், நான்கு ஆண்டுகளாக நிறைவேற்றப்படவில்லை. தற்போது, இடைத்தேர்தலை குறி வைத்து திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அறிவிக்கப்பட்ட திட்டங்களை சாதனைகளாக விளம்பரப்படுத்தி வருகின்றனர். வரும் 27ம் தேதிக்கு பின் திட்டங்கள் அனைத்தும் காகித அளவில் இருக்கும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக துவங்கப்படவில்லை.சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் பென்னாகரத்தில் இல்லை. இங்கு உள்ளாட்சி அமைப்புகளிலும், எம்.எல்.ஏ.,வாகவும், தி.மு.க.,வினர் இருந்தனர். ஆனால், எதையும் மக்களுக்கு செய்யவில்லை.எங்கு பார்த்தாலும் வறட்சி தாண்டவம் ஆடுகிறது. நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. இதனால், அனைத்து வகை பயிர்களும் சாகுபடியில்லாமல் கலகலத்து போய் உள்ளது.

பென்னாகரத்தில் தற்போது, கோடையின் உச்சகட்டமாக எங்கு பார்த்தாலும், வாடிய வயல்கள், வறண்ட நிலமாக காணப்படுகிறது.இளைஞர்கள் வேலையின்மையால் அண்டை மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். விலைவாசி, சட்டம் ஒழுங்கு முற்றிலும் நாசம் அடைந்துள்ளது. மணல் கடத்தல், அரிசி கொள்ளை அமோகமாக நடக்கிறது. தமிழகத்தில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட பென்னாகரம் இடைத்தேர்தல் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி உங்கள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் தி.மு.க., - பா.ம.க., இரு முறை வெற்றி பெற்றுள்ளது.தற்போது, அக்கட்சிகள் சார்பில் இங்கு எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்களின் மகன்கள் போட்டியிடுகின்றனர். அவர்களை தேர்வு செய்தால், அவர்களது தந்தை வழியில் மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள்.

அ.தி.மு.க., ஆட்சியில் ஒகேனக்கலில், ஒரு கோடி ரூபாயில் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.வரும் ஆண்டில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், முக்கிய கோரிக்கையாக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்படும். அ.தி.மு.க., ஆளுங்கட்சியாக இருந்த போது, மக்கள் கோரிக்கை நிறைவேற்றும் வகையிலும், எதிர்க்கட்சியாக இருந்த போது, மக்கள் கோரிக்கைகளுக்காக போராடியும் வருகிறது.பென்னாகரத்தை, 'பொன்' விளையும் நகரமாக மாற்றவும், சர்வாதிகார ஆட்சியை ஒழிக்கவும் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுங்கள்.இவ்வாறு அம்மா பேசினார்.