எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, September 21, 2010

அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல்: அம்மா கண்டனம்


அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்த அரசு டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.







அவரது அறிக்கை:மதுரை திருமங்கலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,விலிருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.,வில் இணைந்தனர். திருமங்கலம் ஒன்றியம், பன்னிக்குண்டு கிளை செயலர் கொடிவைரன் உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் சென்ற போது, அவர்களை தி.மு.க., கிளைச் செயலாளர்  செல்லத்துரை தலைமையில் ஒரு வன்முறைக் கும்பல் வழிமறித்து, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த கொடூரத் தாக்குதலில் கொடிவைரன், கட்சி தொண்டர்கள் மாயாண்டி, சிவமணி மற்றும் மூர்த்தி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சென்ற வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையை தொண்டர்கள் அணுகிய போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட அங்குள்ள அரசு டாக்டர்கள் மறுத்து இருக்கின்றனர்.







ரத்தக் காயங்களுடன் வேதனையுடன் நின்றவர்களை, அரசு டாக்டர்கள் ஈவு இரக்கமின்றி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, விரட்டி அடிக்கப் பார்த்தனர். பின் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மிகவும் தாமதமாக கட்சி தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவத் தொழில் என்பது புனிதமான தொழில். விரோதியாக இருந்தால் கூட நோயாளி என்று வந்துவிட்டால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது ஒரு டாக்டரின் கடமை. இதை மறந்து தாங்கள் எடுத்துக் கொண்ட புனித உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக சிகிச்சை அளிக்க அரசு டாக்டர்கள் மறுத்திருப்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய மனிதாபிமான அற்ற செயல்.கட்சி, இனம், மதம், மொழி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி தொழில் தர்மத்தை மீறி, இவ்வாறு இழிவாக நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.







இதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தி.மு.க.,வினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த கொடிவைரன், மாயாண்டி, சிவமணி, மூர்த்தி விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும். மைனாரிட்டி தி.மு.க., அரசு வீழ்ந்து, எம்.ஜி.ஆர்., ஆட்சி விரைவில் மலர்ந்தவுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், கடமையாற்ற மறுத்த டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.

Saturday, September 18, 2010

பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைக்க அ.இ.அ.தி.மு.க., சார்பில் உண்ணாவிரதம்

மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அ.இ.அதி.மு.க., சார்பில் நாளை திருப்பூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என, டாக்டர் புரட்ச்தலவி அம்மா  அறிவித்துள்ளார்.








அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில், அன்னிய செலாவணியை ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு வகித்த ஜவுளித் தொழிலை முற்றிலுமாக முடக்கிய பெருமைக்குரியவர் மைனாரிட்டி தி.மு.க., அரசின் முதல்வர் கருணாநிதி. கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவும் மின்வெட்டால், ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர் வேலை, ஊதிய இழப்பை சந்தித்ததோடு மட்டுமல்லாமல், தமிழக பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நூற்பாலைகள் இயங்காத சூழ்நிலை நிலவுகிறது.மத்திய அரசின் தவறான பொருளாதார மற்றும் ஏற்றுமதி கொள்கையால், கடந்த ஓராண்டில் மட்டும் நூலின் விலை வெகுவாக உயர்ந்துள்ளது. இதனால் பின்னலாடை உற்பத்திக்கான செலவு 30 சதவீதம் அதிகரித்து, வங்கதேசம், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளோடு போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.







பல பின்னலாடை தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஒட்டுமொத்த ஜவுளித் தொழிலே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாய சலவைப் பட்டறை தொழிற்சாலைகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் மானியம் சென்றடையாத காரணத்தால், இதனுடைய தாக்கம் ஜவுளித் துறையை கடுமையாக பாதித்துள்ளது.அக்டோபர் 1ம் தேதி முதல் பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு முழுமையாக விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ள செயல், "எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார் போல்' அமைந்துள்ளது என, அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.கருணாநிதிக்கு கடிதம் எழுதியும், மத்திய வர்த்தகம், ஜவுளித் துறை அமைச்சர்களை சந்தித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜவுளித் தொழிலுக்கு எதிரான நடவடிக்கை எடுத்திருக்கும் மத்திய அரசு, அதற்கு உறுதுணையாக இருக்கும் முதல்வர் கருணாநிதி, மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு என் கண்டனத்தை தெரிவிக்கிறேன்.







கடுமையான மின்வெட்டை ஏற்படுத்தி, பஞ்சு ஏற்றுமதி கொள்கையை மாற்றியமைத்து, நூல், கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழில்களை உள்ளடக்கிய ஜவுளித் தொழிலை ஸ்தம்பிக்க வைத்த மைனாரிட்டி தி.மு.க., அரசு, மத்திய ஜவுளித் துறை அமைச்சரை கண்டித்தும், நூல் விலையை கட்டுப்படுத்தவும், தட்டுப்பாடின்றி உரிய விலையில் நூல் கிடைக்கவும், ஜவுளித் தொழிலை பாதிக்காத வகையில் ஏற்றுமதிக் கொள்கையை மாற்றியமைக்கவும், சாயச் சலவை பட்டறைகளின் பிரச்னைக்கு தீர்வு காணவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், நாளை திருப்பூர் ரயில் நிலையம் முன், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்.

Tuesday, September 14, 2010

எடுக்க வேண்டிய சபதம் என்ன? அம்மா அறிக்கை


"மைனாரிட்டி தி.மு.க., அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே, அண்ணா துரையின் பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும்' என,டாக்டர் புரட்சிதலைவி அம்மா  தெரிவித்துள்ளார்.







அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: மொழி, இலக்கியம், இனம், பண்பாடு ஆகியவற்றின் மறுமலர்ச்சிக்காக தன் வாழ்நாளை மிச்சமில்லாமல் அர்ப்பணித்தவர் அண்ணாதுரை. "கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு, ஒன்றே குலம் ஒருவனே தேவன்' போன்ற அமுத மொழிகள் என்றென்றும் சாகா வரம் பெற்ற அமரத்துவமான போதனைகளாய் இன்றும் வலம் வருகின்றன. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், பொருளாதாரத் துறையிலே மறுமலர்ச்சி என்ற தலையாய நோக்கங்களை தன்னகத்தே கொண்டு வாழ்ந்த அண்ணாதுரை மக்களோடு மக்களாக வாழ்ந்தார். "என் கடன் பணி செய்து கிடப்பதே' என பொதுத் தொண்டில் பேரார்வம் கொண்டு உழைத்தார்.







தனது பிறந்தநாளை கூட "என்னை இச்சமூகம் மேலும் பணியாற்ற இடும் கட்டளை' என்றே அடக்கத்துடன் அறிவித்தார். அரை நூற்றாண்டு கால தனது அயராத போராட்டத்தால் காங்கிரஸ் கட்சியை தமிழக அரசியல் அதிகாரத்தில் இருந்தே அப்புறப்படுத்தி, திராவிட இயக்க ஆட்சிக்கு கால்கோள் நாட்டினார். அநாகரிக அரசியலின் உச்சம் தொட்டுவிட்ட  கருணாநிதி அரசை வீட்டுக்கு அனுப்புவது ஒன்றே அண்ணாதுரையின் 102வது பிறந்தநாளில் நாம் ஏற்கும் சபதமாக இருக்க வேண்டும். இவ்வாறு அம்மா  கூறியுள்ளார்

Friday, September 10, 2010

மதுரையில் அக்., 18ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் : அம்மா அறிவிப்பு


முல்லைப் பெரியாறு பிரச்னை, ரவுடிகள் அட்டகாசம், மின் வெட்டு, மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளை, மீனவர் பிரச்னை, விலைவாசி உயர்வு ஆகிய பிரச்னைகளை முன்னிறுத்தி, மைனரய் தி.மு.க., அரசை கண்டித்து, அக்டோபர் 18ம் தேதிடாக்டர் புரட்சிதலைவி அம்மா தலைமையில் அ.இ.அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடக்கிறது.







இது குறித்து அம்மாவின்  அறிக்கை: அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னையில் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய் கொண்டிருக்கின்றன. ரவுடிகளின் ஆதிக்கத்தால் மக்களின் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடுமையான மின் வெட்டு காரணமாக அனைத்து தொழில்களும் முடங்கிப் போய் விட்டன. மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர் குறைந்து போய் விட்டது. மீன்பிடித் தொழில் கேள்விக் குறியாகி விட்டது. நூல் விலை காரணமாக ஜவுளித் தொழில் நலிந்து விட்டது. மக்கள் செய்வதறியாது திகைத்து போய் நின்று கொண்டிருக்கின்றனர். "பெரிய ரவுடியாகும் ஆசையில், கொலை செய்தேன்' என, ஒரு கொலையாளி போலீசாரிடம் தெரிவிக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது.







இப்படி, மக்களின் இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும், துயரங்களுக்கும், சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் காரணமான தி.மு.க., அரசை கண்டித்து அண்மையில் எனது தலைமையில் கோவை, திருச்சி, ஆகிய இடங்களில் நடந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. "மதுரைக்கு வராதே, வந்தால் கொலை செய்து விடுவேன்' என, தற்போது மிரட்டல் கடிதங்கள் வருகின்றன. இந்த மிரட்டல்களுக்கு நான் பயந்தவள் இல்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து, வரும் அக்டோபர் 18ம் தேதி, மதியம் 2:30 மணியளவில், மதுரையில் எனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் அம்மா தெரிவித்துள்ளார்.

Monday, September 6, 2010

தகவல் உரிமை சட்ட நோக்கத்தையே சிதைத்து விட்டனர்

"என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம், தகவல் உரிமைச் சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது' என,  டாக்டர் புரட்ச்தலைவி அம்மா அவர்கள்  குற்றம் சாட்டியுள்ளார்.








அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தகவல் உரிமை சட்டப்படி, தலைமை தகவல் ஆணையரையும், தகவல் ஆணையர்களையும் முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் முதல்வரால் தெரிவு செய்யப்படும் ஓர் அமைச்சர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்.அ.இ.அ.தி.மு.க., ஆட்சியில் தலைமை தகவல் ஆணையர் நியமிக்கப்பட்ட போது, கருணாநிதி தனக்கு பதிலாக, அன்பழகனை அனுப்பி வைத்ததாகவும், ஆனால், தற்போது நான் எனது சார்பில் யாரையும் அனுப்பி வைக்கவில்லை என்று செய்தி வெளியாகியுள்ளது. நான் முதல்வராக இருந்த போது நடந்த கூட்டத்தில், கருணாநிதி தனக்கு பதிலாக அன்பழகனை அனுப்பி வைக்கவில்லை. அன்றைய எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தான், அன்பழகன் கலந்து கொண்டார்.







தற்போது நடந்த குழுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக, குழுவின் உறுப்பினர் என்ற முறையில், தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் பெயர்களை அரசிடம் நான் கோரியிருந்தேன். ஆனால், அரசு அந்த விவரங்களை எனக்கு அளிக்கவில்லை. எனவே, எந்த விதமான விவரமும் இன்றி கூட்டத்தில் கலந்து கொண்டு எனது கருத்துக்களை தெரிவிக்க முடியாது என்பதால் தான், அந்த கூட்டத்திற்கு நான் செல்லவில்லை.நான் கோரிய விவரங்களை அரசு அளித்திருக்குமானால், அந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருப்பேன். மைனாரிட்டி தி.மு.க., அரசின் பாரபட்சமான நடவடிக்கை தான், நான் பங்கேற்காததற்கு காரணம்.அரசு தரப்பில் தலைமை தகவல் ஆணையரை ஏற்கனவே முடிவு செய்து விட்டு, சம்பிரதாயத்திற்காக என்னை அழைத்தது போல் தான் அரசின் நடவடிக்கை அமைந்துள்ளது.







இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்பது தெளிவாகிறது; இது சர்ச்சைக்கு வழி வகுக்கும் செயல்.வெளிப்படையான முறையில் தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த குழுவில் எதிர்க்கட்சி தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்னை கலந்தாலோசிக்காமல், என் கருத்தை கேட்காமல், தலைமை தகவல் ஆணையரை நியமனம் செய்திருப்பதன் மூலம் இந்த சட்டத்தின் நோக்கத்தையே அரசு சிதைத்து இருக்கிறது.ஊடகங்கள் மற்றும் தகவல் உரிமை ஆர்வலர்களின் யூகத்திற்கு ஏற்ப, தலைமை தகவல் ஆணையரை நியமித்ததன் மூலம், இந்த நியமனம் ஒளிவு மறைவற்ற முறையில், வெளிப்படையாக நடக்கவில்லை என்பதை கருணாநிதி நிரூபித்து இருக்கிறார். அரசின் இந்த நடவடிக்கை சட்டத்திற்கு புறம்பான செயல்.இவ்வாறு அம்மா தெரிவித்துள்ளார்

Sunday, September 5, 2010

மாணவர் மீது தாக்குதல் நடந்தால்... : சும்மா இருக்க மாட்டேன் என்கிறார் அம்மா

"கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, டாக்டர்  புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.




அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, "திருடன், திருடன்' என்ற கூக்குரலைக் கேட்டவுடன், அந்த நபரை உடனடியாக பிடித்துள்ளனர்.அந்த சமயத்தில், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குமரவேலை திருடன் பார்த்தவுடன், "என்னைய்யா என்னை உங்களுக்கு தெரியவில்லையா?' என கேட்டிருக்கிறான். உடனே அந்த தலைமை காவலர் திருடனைப் பிடித்துக் கொடுத்த சட்டக் கல்லூரி மாணவர்களை நோக்கி, "நீங்கள் எல்லாம் யார்?' என கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த மாணவர்கள் "நாங்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்' என பதில் அளித்து, தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தி இருக்கிறார் தலைமைக் காவலர். சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.







திருச்சியில் திருடனுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, புதுக்கோட்டையில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ. இ.அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன் பேசியுள்ளார்.இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், ஒன்றிய தி.மு.க., செயலருமான ராஜு தலைமையில் ஒன்பது பேர், அன்பழகனை ஆயுதங்கள் கொண்டு கொடூரமாகக் தாக்கியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் அன்பழகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுசம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, மைனாரிட்டி தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.