எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Tuesday, September 21, 2010

அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது தாக்குதல்: அம்மா கண்டனம்


அ.இ.அ.தி.மு.க.,வினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்த அரசு டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.







அவரது அறிக்கை:மதுரை திருமங்கலம் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,விலிருந்து விலகி அ.இ.அ.தி.மு.க.,வில் இணைந்தனர். திருமங்கலம் ஒன்றியம், பன்னிக்குண்டு கிளை செயலர் கொடிவைரன் உள்ளிட்ட நான்கு பேர் வாகனத்தில் சென்ற போது, அவர்களை தி.மு.க., கிளைச் செயலாளர்  செல்லத்துரை தலைமையில் ஒரு வன்முறைக் கும்பல் வழிமறித்து, பயங்கர ஆயுதங்களைக் கொண்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த கொடூரத் தாக்குதலில் கொடிவைரன், கட்சி தொண்டர்கள் மாயாண்டி, சிவமணி மற்றும் மூர்த்தி ஆகியோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சென்ற வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. ரத்த வெள்ளத்துடன் சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனையை தொண்டர்கள் அணுகிய போது, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கக்கூட அங்குள்ள அரசு டாக்டர்கள் மறுத்து இருக்கின்றனர்.







ரத்தக் காயங்களுடன் வேதனையுடன் நின்றவர்களை, அரசு டாக்டர்கள் ஈவு இரக்கமின்றி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி, விரட்டி அடிக்கப் பார்த்தனர். பின் மருத்துவமனை உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மிகவும் தாமதமாக கட்சி தொண்டர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது.மருத்துவத் தொழில் என்பது புனிதமான தொழில். விரோதியாக இருந்தால் கூட நோயாளி என்று வந்துவிட்டால், அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது ஒரு டாக்டரின் கடமை. இதை மறந்து தாங்கள் எடுத்துக் கொண்ட புனித உறுதிமொழிக்கு முற்றிலும் எதிராக சிகிச்சை அளிக்க அரசு டாக்டர்கள் மறுத்திருப்பது அனைவரும் வெட்கப்பட வேண்டிய மனிதாபிமான அற்ற செயல்.கட்சி, இனம், மதம், மொழி போன்ற எவ்வித பாகுபாடுமின்றி தொழில் தர்மத்தை மீறி, இவ்வாறு இழிவாக நடந்து கொண்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.







இதற்கான தண்டனையை அவர்கள் அனுபவிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை. தி.மு.க.,வினரின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் படுகாயமடைந்த கொடிவைரன், மாயாண்டி, சிவமணி, மூர்த்தி விரைவில் பூரண குணமடைந்து தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டும். மைனாரிட்டி தி.மு.க., அரசு வீழ்ந்து, எம்.ஜி.ஆர்., ஆட்சி விரைவில் மலர்ந்தவுடன் கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களுக்கும், கடமையாற்ற மறுத்த டாக்டர்களுக்கும் தக்க பாடம் புகட்டப்படும். இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.

No comments:

Post a Comment