"கட்சியினர் மற்றும் மாணவர்கள் மீது தாக்குதல் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி நிகழ்ச்சி தொடர்பாக, சில பணிகளில் ஈடுபட்ட போது, "திருடன், திருடன்' என்ற கூக்குரலைக் கேட்டவுடன், அந்த நபரை உடனடியாக பிடித்துள்ளனர்.அந்த சமயத்தில், அப்பகுதிக்கு வந்த போக்குவரத்து தலைமைக் காவலர் குமரவேலை திருடன் பார்த்தவுடன், "என்னைய்யா என்னை உங்களுக்கு தெரியவில்லையா?' என கேட்டிருக்கிறான். உடனே அந்த தலைமை காவலர் திருடனைப் பிடித்துக் கொடுத்த சட்டக் கல்லூரி மாணவர்களை நோக்கி, "நீங்கள் எல்லாம் யார்?' என கேட்டிருக்கிறார்.அதற்கு அந்த மாணவர்கள் "நாங்கள் சட்டக் கல்லூரி மாணவர்கள்' என பதில் அளித்து, தங்களுடைய அடையாள அட்டைகளை காண்பித்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர்கள் என்று தெரிந்திருந்தும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி, சரமாரியாக தாக்கி காயப்படுத்தி இருக்கிறார் தலைமைக் காவலர். சட்டக் கல்லூரி மாணவர்களை தாக்கிய தலைமைக் காவலர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
திருச்சியில் திருடனுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை, புதுக்கோட்டையில் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் தி.மு.க.,வினர் நடத்திய கூட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், காவல் துறையின் அனுமதி பெற்று கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அ. இ.அ.தி.மு.க.,வை சேர்ந்த அன்பழகன் பேசியுள்ளார்.இதை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க., ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவரும், ஒன்றிய தி.மு.க., செயலருமான ராஜு தலைமையில் ஒன்பது பேர், அன்பழகனை ஆயுதங்கள் கொண்டு கொடூரமாகக் தாக்கியுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் அன்பழகன் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.இதுசம்பந்தமாக அ.இ.அ.தி.மு.க., சார்பில், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு சிலரை காவல் துறை கைது செய்திருந்தாலும், அவர்கள் மீது மிகவும் சாதாரண பிரிவுகளில் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்ய வேண்டும். மாணவர்கள் தாக்கப்படும் நிகழ்வுகள் இனியும் தொடருமேயானால், அதைப் பார்த்துக் கொண்டு நான் சும்மா இருக்க மாட்டேன் என்பதை, மைனாரிட்டி தி.மு.க., அரசுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறேன்.இவ்வாறு அம்மா கூறியுள்ளார்.
No comments:
Post a Comment