""மானாமதுரை பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் நிறைவேற்றாததை கண்டித்து அ.இ.அ.தி.மு.க., சார்பில் இன்று(17ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெறும்,'' என இதய தெய்வம் டாக்டர் புரட்சிதலைவி அம்மா அறிவித்துள்ளார். இது குறித்த அவரின் அறிக்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை, விளையாட்டு மைதான வசதியின்றி, இட நெருக்கடியால், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் அவதிப்படுகின்றனர். இதனைப் போக்கும் வகையில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான உதவிக் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தையும், பயணிகள் தங்கும் விடுதியையும் வேறு இடத்திற்கு மாற்றி அந்த இடத்தை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ஒதுக்க வேண்டும் என அ.இ.அ.தி.மு.க., சார்பில் சட்டசபையில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மானாமதுரை வைகை ஆற்றின் குறுக்கே போலீஸ் நிலையத்திற்கும், கிருஷ்ணராஜபுரம் தெருவிற்கும் இடையில் பாலம் கட்டுவதாக அரசு அறிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. குடிநீர், சாலை, தெருவிளக்கு ஆகிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு அவலம் மானாமதுரை தொகுதியில் நிலவுகிறது. வைகை ஆற்றின் கரை ஓரங்களில் தடுப்பு சுவர் அமைக்கப்படாததால், கழிவு நீர் ஆற்றில் கலப்பதாகவும், மானாமதுரை தொகுதியில், பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். திருபுவனம் பேரூராட்சியில் பஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கையும், சமூக நல நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
திருபுவனம் ஒன்றியத்தில், லாடனேந்தல் முதல் திருப்பாச்சேத்தி வரை செயல்பட்டு வரும் மணல் குவாரியை அகற்றாததால், தண்ணீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. புதிதாக நில சர்வே செய்த பிறகும், ஆவணங்களை ஒப்படைக்காமல், பேரூராட்சி நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. தாட்கோ மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்களில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது என மக்கள் தெரிவிக்கின்றனர். இளையான்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. சீரான மின்சாரம் இன்றி இப்பகுதி இருளில் மூழ்கியுள்ளது.
அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை என தகவல்கள் வருகின்றன. மொத்தத்தில் மானாமதுரை தொகுதி முழுவதும் எவ்வித மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. அதே சமயத்தில் மாநகராட்சிக்கு இணையாக குடிநீர், வீட்டு வரி ஆகியவை வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவற்றை கண்டித்து, மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகில், நாளை(17ம் தேதி) காலை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment