எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Monday, August 9, 2010

டாஸ்மாக் பணியாளர்களை முதல்வர் மிரட்டுகிறார்: அம்மா குற்றச்சாட்டு

"வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாஸ்மாக் தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல், பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படுமென, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது' என, 
டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசின் மொத்த வருவாயில், 25 சதவீத வருவாயை ஈட்டித் தரும், 30 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் படும் துன்பங்கள், துயரங்கள் சொல்லி மாளாது. எனது ஆட்சி காலத்தில் பணியமர்த்தப்பட்டார்கள் என்பதற்காக, விசாரணையின்றி பணி நீக்கம் போன்ற இன்னல்களுக்கு தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.பின்னர், லஞ்சம் கொடுத்தால் தான் மீண்டும் வேலை என்ற மோசமான நிலை நிலவுகிறது. ஏழு ஆண்டுகள் பணியாற்றியும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இவர்கள் விஷயத்தில், எந்த ஒரு தொழிலாளர் நலச் சட்டங்களும் பின்பற்றப்படுவதில்லை.டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், எட்டு மணி நேர வேலை, வார விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை குழு, வரும் 11ம் தேதியன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சங்கங்களை அழைத்து பேசாமல், "பூரண மதுவிலக்கு அமல் செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்' என, டாஸ்மாக் பணியாளர்களை மிரட்டும் வகையில் முதல்வர் பேசுகிறார். இது அவரது தொழிலாளர் விரோத போக்கையே காட்டுகிறது.மறுபுறம், "வேலை நிறுத்தத்தில் பங்கேற்க மாட்டோம்' என தொழிலாளர்களை அச்சுறுத்தி கையெழுத்து வாங்கும் நடவடிக்கைகளிலும், புதிய ஆட்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டு வருகிறது.பணியாளர்களை நேரடியாக சென்று மிரட்டும் நடவடிக்கையில் தி.மு.க.,வினர் ஈடுபட்டுள்ளனர்.மைனாரிட்டி  தி.மு.க., அரசின் இந்த தொழிலாளர் விரோத போக்கிற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். போராடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பது தான் முறையான செயல்.இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment