"சாலை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத மைனாரிட்டி தி.மு.க., அரசைக் கண்டித்து, விருதுநகர் அ.இ.அ.தி.மு.க., சார்பில், சாத்தூரில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்' என, டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தேசிய நெடுஞ்சாலை கடந்த ஆண்டு நான்கு வழிச்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நான்கு வழிச் சாலை அமைக்கப்படுவதற்கு முன், படந்தால் சந்திப்பில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என படந்தால், குருலிங்காபுரம் சுற்றியுள்ள 16 கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை மைனாரிட்டி தி.மு.க., அரசு கண்டு கொள்ளவில்லை.நான்கு வழிச் சாலையைக் கடந்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனை ஆகியவற்றுக்கு மக்கள் செல்லும் போது அடிக்கடி விபத்து நடக்கிறது.கடந்த ஒன்றரை ஆண்டில் நடந்த சாலை விபத்தில் மட்டும் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர்; 70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதில், தற்காலிக ஏற்பாடாக படந்தால் சந்திப்பில் சிக்னல் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.தென் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதுகுறித்து, பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.சாத்தூர் அரசு பொது மருத்துவமனை மின்சாரம், படுக்கை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி செயல்படுகிறது.
தி.மு.க., அமைச்சர், புதிதாக மருத்துவமனை கட்டப்படும் என்று சொல்லியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.சாத்தூர் மக்களின் அடிப்படை தேவைகளை உடனே செய்து தர வலியுறுத்தி, அ.இ.அ.தி.மு.க., சார்பில் சாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நாளை காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment