"சென்னை துறைமுகம் - மதுரவாயல் வரை உயர்மட்ட சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர். ஒன்பது கி.மீ., நீளமுள்ள இந்த சாலை 19 கி.மீ., ஆனது ஏன்? இதனால் பாதிக்கப்படும் குடிசைவாழ் மக்களுக்கு உரிய வாழ்வாதாரம் கிடைக்கவில்லை எனில், அ.இ.அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும்' என்று டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னைத் துறைமுகம் - மதுரவாயலை இணைக்கும் வகையில், 9 கிலோ மீட்டர் நீளமுள்ள உயர்மட்ட சாலை அமைக்கப் போவதாக, மைனாரிட்டி தி.மு.க., அரசு 2007ல் அறிவித்தது. தற்போது இந்த சாலை 19 கி.மீ., நீளமுள்ளதாக அமைய, அதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, மறு குடியமர்வுக்கான பணிகள் துவங்கி விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வசிப்பவர்களிடம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, இரவோடு இரவாக போலீசின் உதவியோடு வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தாங்களாகவே முன்வந்து தங்கள் இடங்களைத் தருவதாக அப்பகுதி மக்களிடம் இருந்து கையொப்பம் பெற்றுள்ளது. பெரும்பாக்கம், ஜோதியம்மாள் நகர் போன்ற பகுதிகளில் உள்ள ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை இடித்து, அந்தப்பகுதி மக்களை நடுத்தெருவில் நிற்க வைத்துள்ளனர். கூவத்தை சுத்தப்படுத்துகிறேன் என்று கூறி, அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. எண்ணூர் - கொட்டிவாக்கம் கடலோர மேம்பால நெடுஞ்சாலைத் திட்டம் வந்தால், மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும்.
குடிசைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அதே இடத்தில் அடிப்படை வசதிகளுடன் கூடிய கல் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்பது தான், "ஜவஹர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு' திட்டத்தின் நோக்கம். ஆனால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்கும் வகையில் தொலை தூரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. குடிசைப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தோடு விளையாடும் மைனாரிட்டி தி.மு.க., அரசிற்கு கண்டனத்தை தெரிவிப்பதோடு, அவர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், குடிசை வாழ் மக்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., போராட்டக் களத்தில் இறங்கும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment