உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை நிலையை கண்டித்து, விழுப்புரம் தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க., சார்பில், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் உழவர் பணி கூட்டுறவு சங்கத்தில், 25 கிராமங்களைச் சேர்ந்த நான்காயிரம் விவசாயிகள் அங்கத்தினர்களாக உள்ளனர். இச்சங்கத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளையர்களை போலீசார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. திருநாவலூர் தொகுதிக்கு உட்பட்ட தென் பெண்ணையாற்றில் வரம்பு மீறி மணல் கொள்ளையடிக்கப்படுகிறது.
இதனால், நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து 10 ஆயிரம் ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்டும், இதைத் தடுத்து நிறுத்த மைனாரிட்டி தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனை இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளுக்கு மத்தியில் இருக்கிறது. இந்தப் பகுதியில் சாலை விபத்து ஏற்பட்டு, உயிருக்கு போராடும் நிலையில் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனையை நாடிச் செல்கின்றனர். அப்போது அங்கு அவசர சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான உபகரணங்கள் கூட இல்லாத சூழ்நிலை நிலவுகிறது. இப்பிரச்னைகளுக்காக மைனாரிட்டி தி.மு.க., அரசை கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க., சார்பில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகம் முன், இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இவ்வாறு டாகடர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment