"பதுக்கல், கடத்தல் தொழில்களை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவிப்பது, விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம்' என,டாக்டர் புரட்சிதலைவி அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:முதல்வர் கருணாநிதி தன் அறிக்கையில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வுக்கும் மத்திய அரசு தான் பொறுப்பு என்றும், மத்திய அரசை நடத்தும் காங்கிரசை பற்றி நான் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். கருணாநிதியின் இது போன்ற பதில் தன் பொறுப்பை தட்டிக் கழிப்பதாக உள்ளது. பதுக்கல், கடத்தல் தொழில்களை மைனாரிட்டி தி.மு.க., அரசு ஊக்குவிப்பது விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம்.மத்திய கூட்டணி அரசின் அமைச்சரவையில் தி.மு.க., அங்கம் வகிப்பதோடு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்விற்கும் பச்சைக் கொடி காட்டியிருக்கிறது. இதை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரே தெரிவித்திருக்கிறார்.
இதற்கு மறுப்பையும் கருணாநிதி இதுநாள் வரை தெரிவிக்கவில்லை. எனவே தான் விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு மைனாரிட்டி தி.மு.க., அரசு காரணமென்று நான் குற்றம் சுமத்தினேன். அதே சமயத்தில் விலைவாசி உயர்வுக்கும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கும் காரணமான மத்திய அரசையும் நாங்கள் கண்டித்திருக்கிறோம்.அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக் காலத்திலும் விலைவாசி உயர்ந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக, கருணாநிதி ஒரு புள்ளி விவரத்தை அளித்திருக்கிறார். உதாரணமாக 2001ம் ஆண்டு பொன்னி புழுங்கலரிசி விலை கிலோ ஒன்றுக்கு 14 ரூபாய் இருந்ததாகவும், 2005ம் ஆண்டு 20 ரூபாய் அளவிற்கு உயர்ந்து விட்டதாகவும் கருணாநிதி கூறியிருக்கிறார்.
அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில் அதிகபட்சமாக பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 17 ரூபாய் என்ற அளவில் தான் விற்கப்பட்டது. ஆனால், தற்போது பொன்னி புழுங்கலரிசியின் விலை கிலோ 44 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்து விட்டது. 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் 50 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாக கருணாநிதி தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் ஒரு சில கடைகளில், சில நாட்கள் மட்டுமே வழங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் தரமற்று இருந்தது. இத்திட்டம் தற்போது நடைமுறையில் இல்லையென்பதும் கருணாநிதிக்கு தெரியாது போலும்அ.இ..அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் சாதாரண ஓட்டல்களில் 15 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு சாப்பாடு, தற்போது 50 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ளதை வைத்தே, 4 ஆண்டுகளில் விலைவாசி மூன்று மடங்கு உயர்ந்துள்ளதென்பதை மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா?மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கான பிரீமியத் தொகை 2,000 கோடி ரூபாய் என்றும், அதில் 400 கோடி ரூபாய் ஏஜன்ட் கமிஷனை கருணாநிதி குடும்பத்தினர் பெற்று விட்டதாக, நான் குற்றம் சுமத்தி இருப்பது பொய் என்றும் கருணாநிதி கூறி இருக்கிறார்.
இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்.அரசு ஆணையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ஓர் ஆண்டிற்கு 517.307 கோடி ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அரசு ஆணையில் ஒரு குடும்பத்திற்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஆண்டிற்கு 517.307 கோடி ரூபாய் என்றால், 4 ஆண்டுகளுக்கு தோராயமாக 2,000 கோடி ரூபாய் தானே? இதைத்தான் நான் குறிப்பிட்டேன். இதில் என்ன தவறை கருணாநிதி கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. இவ்வாறு அம்மா அவர்கள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment