எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Thursday, July 1, 2010

கருணாநிதி போர்க் குற்றவாளி:அம்மா அறிக்கை.



 "ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு இலங்கை செல்லும்போது, அவர்களை அ.இ. அ.தி.மு.க., குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும்' என, டாகடர் புரட்சிதலைவி அம்மா  அறிவித்துள்ளார்.
அம்மாவின் அறிக்கை: இலங்கையில் 25 ஆண்டுகால உள்நாட்டுப் போரில் நடந்த உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களை ஆராய, இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் தலைமையில், மூன்று பேர் கொண்ட ஒரு குழுவை ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூன் நியமித்து உள்ளதாக செய்தி வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழர்களை தமிழக அரசும், அதன் முதல்வருமான கருணாநிதியும் கைவிட்டுவிட்ட நிலையில், பான் கி மூன் ஆதரவுக் கரம் நீட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழுவுக்கு விசா தருவதை, இலங்கை அரசு தனது இயல்புக்கு ஏற்ப மறுத்து வருகிறது. ராஜபக்ஷே அரசுக்கு மறைக்க எதுவுமில்லை என்றால், ஐ.நா., குழுவை சுதந்திரமாக இலங்கைக்குள் வர அனுமதித்து, எங்கு வேண்டுமானாலும் செல்ல அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால் இந்தக் குழு, ராஜபக்ஷேவால் மறைக்கப்பட்ட அத்துமீறல்களை, மனித உரிமை மீறல்களை, கொடுமைகளை வெளிக்கொணரும் என்பதில் ஐயமில்லை.

தமிழக முதல்வர் கருணாநிதி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ம் தேதி காலை சிற்றுண்டியை முடித்துவிட்டு, அண்ணாதுரை நினைவிடம் அருகே திடீர் உண்ணாவிரதம் இருந்தார். மூன்று மணி நேரத்துக்குப் பிறகு, இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதாக தனக்கு தகவல் கிடைத்து இருக்கிறது என அறிவித்தார். "கனரக ஆயுதங்கள் இனி பயன்படுத்தப்படாது' என்ற உறுதிமொழியையும் அவர் அளித்தார். பின், "உண்ணாவிரதத்தை' நிறுத்திவிட்டு, மதிய உணவுக்காக வீட்டுக்குச் சென்றுவிட்டார். துரதிர்ஷ்டவசமாக, அப்பாவி இலங்கைத் தமிழர்கள், கருணாநிதியின் வார்த்தையை நம்பி, போர் முடிந்துவிட்டது என நினைத்து, பதுங்கு குழிகளிலிருந்து வெளியே வந்தனர். அப்போது வானத்தில் வட்டமிட்டிருந்த அதிவேக இலங்கை ஜெட் போர் விமானங்கள், கொத்துக் கொத்தாக குண்டு மழை பெய்தன. இரண்டே நாட்களில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மாண்டனர். போர் நிறுத்தம் ஏற்படாதபோது, போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிவித்து, நிராயுதபாணிகளாக, ஆதரவற்ற நிலையில் இருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்களை, ராணுவத்துக்கு இரையாக்கியதன் மூலம், நேரடியாக போரில் பங்கேற்காத மக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி, அவர்களைக் கொலை செய்ய கருணாநிதி உதவி புரிந்திருக்கிறார்.

ராஜபக்ஷே சகோதரர்கள் மற்றும் இலங்கை ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய்கள் எவ்வாறு போர்க் குற்றவாளிகள் எனக் கருதப்படுகின்றனரோ, அதைப் போலவே கருணாநிதியும் ஒரு போர்க் குற்றவாளி தான். ஐ.நா., சபை பிரதிநிதிகள் குழு, இலங்கை செல்லும்போது அவர்களை அ.தி.மு.க.,வைச் சேர்ந்த குழு சந்தித்து, "கருணாநிதி ஒரு போர்க் குற்றவாளி' என பிரகடனம் செய்யத் தேவையான ஆதாரங்களை அளிக்கும். இந்த மரண வியாபாரியின் சதிச் செயல்கள் காரணமாக போரில் உயிரிழந்த ஆயிரக்கணக்கான ஆத்மாக்களுக்கு குறைந்தபட்சம், இதையாவது நாம் செய்ய வேண்டும்; இதைத் தான் நம்மால் செய்ய முடியும். இவ்வாறு புரட்சிதலைவி அம்மா அவர்கள்  தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment