ஈரானில் கைது செய்யப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்
12:16 AM | மே 28, 2016
சென்னை, கடல் எல்லை கடந்து வந்ததாக கூறி ஈரானில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் அம்மா அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் அம்மா அவர்கள் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-பரிதாப நிகழ்வுதமிழகத்தில் இருந்து சென்றிருந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்களை ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்து ஜெயிலில் அடைத்திருக்கும் பரிதாபமான நிகழ்வை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.சவுதி அரேபியாவைச் சேர்ந்த அலி ஜுரோகி என்பவரின் பரிந்துரையின் அடிப்படையில் கிடைத்த ஒப்பந்தத்தின்படி, அந்த நாட்டில் 5 மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். சவுதி அரேபியாவில் உள்ள குவாதிப் மீன்பிடி தளத்தில் இருந்து கடந்த ஏப்ரல் 23-ந் தேதியன்று எந்திரப்படகில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.சட்ட நடவடிக்கைமீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கவனக்குறைவு காரணமாக ஈரான் நாட்டு கடல் பகுதிக்கு சென்று விட்டனர். ஏப்ரல் 24-ந் தேதியன்று அவர்கள் 5 பேரையும் ஈரான் கடலோர காவல்படையினர் கைது செய்து, டெலோரன் மத்திய சிறையில் அடைத்து விட்டனர்.இதில் உங்களது தனிப்பட்ட தலையீடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உடனடியாக நீங்கள் சவுதி அரேபியா மற்றும் டெக்ரானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். அந்த 5 அப்பாவி ஏழை மீனவர்களை உடனே மீட்பதற்கு தகுந்த சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்படி அவர்களை அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.