எங்கள் வளையப்பகுதிக்கு வந்தமைக்கு மிக்க நன்றி!நன்றி!நன்றி!

Friday, April 16, 2010

அ.இ.அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் கூட்டம்: 27ம் தேதி 'பந்த்'தில் பங்கேற்க முடிவு


சென்னை:'மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கையால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை எதிர்த்து, நாடு முழுவதும் வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு போராட்டத்தில், தமிழக மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்' என, அ.இ.அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.அ.இ.அ.தி.மு.க., பொதுச் செயலாளர் புரச்சித்தலைவி அம்மா அவர்களின் போயஸ் தோட்டம் இல்லத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நேற்று நடந்தது. காலை 11.10 மணிக்கு துவங்கிய அக்கூட்டம் மதியம் 12 மணி வரை நீடித்தது. ஜெயலலிதா தலைமை வகித்தார்.

ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, பொருளாளர் மாசிலாமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டு குழுத் தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், பார்வர்டு கட்சி சார்பில் கதிரவன், மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.அ.இ.அ.தி.மு.க., சார்பில் செங்கோட்டையன், தம்பிதுரை பங்கேற்றனர். வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த கூட்டணிக் கட்சிகள் அக்கூட்டத்தில் முடிவெடுத்தன.

கூட்டம் முடிந்த பின், வெளியே வந்த வைகோ மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், நிருபர்களிடம் கூறியதாவது:தி.மு.க., அங்கம் வகிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடைபிடித்து வரும் தாராளமய பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, அத்தியாவசியப் பண்டங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையும், மத்திய அரசு உயர்த்தியது. நூல் விலை உயர்ந்ததன் காரணமாக, ஜவுளித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரத்திற்கு அளித்து வந்த மானியம் 300 கோடி ரூபாயை குறைத்ததோடு உர விலை மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்கியதால் உரவிலையும் உயர்ந்து விட்டது. இதன் காரணமாக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

மொத்தத்தில் இந்த விலைவாசி உயர்வு அனைத்துத் தரப்பு மக்களையும் கடுமையாக பாதித் துள்ளது. ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.அ.இ.அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் கடந்த 12ம் தேதி டில்லியில் கூடி, விலைவாசி உயர்வுக்கு காரணமான ஐ.மு., கூட்டணி அரசை எதிர்த்து வரும் 27ம் தேதி தேசிய அளவில் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.வரும் 27ம் தேதி நடக்கவுள்ள கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக நடத்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். இந்த ஒருங்கிணைப்பு கூட்டம் எதிர்காலத்திலும் நிச்சயம் தொடரும்.இவ்வாறு வைகோ கூறினார்.

No comments:

Post a Comment