விபத்தில் மரணமடைந்த இருவரது
குடும்பங்களுக்கு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் ரூ.2 லட்சம்
நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்கள். இதுகுறித்து முதலமைச்சர்
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அறிக்கை வருமாறு:- காஞ்சிபுரம் மாவட்டம்,
செங்கல்பட்டு வட்டம், கேளம்பாக்கம் அடுத்த பெரிய பில்லேரியைச் சேர்ந்த
பரமசிவம் என்பவர் தனது மனைவி பத்மாவதியுடன் 20.12.2011 அன்று பொத்தேரி
அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையைக் கடக்கும் போது தாம்பரத்திலிருந்து
வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் பலத்த காயம் ஏற்பட்டு
சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த
நிலையில் சிகிச்சை பலனின்றி பரமசிவம் 21.12.2011 அன்று உயிரிழந்தார் என்ற
செய்தியையும்; புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, குளத்தூர்
கிராமம் திருச்சிராப்பள்ளி -காரைக்குடி நெடுஞ்சாலையில் 25.12.2011 அன்று
அரசு பேருந்து திடீரென பழுது ஏற்பட்டு சாலையில் கவிழ்ந்ததில், அதன்
ஓட்டுநர் வெள்ளைச்சாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற
செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். இவ்விரு சாலை
விபத்துகளில் அகால மரணமடைந்த பரமசிவம் மற்றும் ஓட்டுநர் வெள்ளைச்சாமி
ஆகியோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும்
தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், 20.12.2011 அன்று பொத்தேரி அருகே
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த
பரமசிவத்தின் மனைவி பத்மாவதி படுகாயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பதை அறிந்து நான்
மிகவும் வருத்தமடைந்தேன். இவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்ற
என்னுடைய விருப்பத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.சாலை விபத்துகளில்
உயிரிழந்த பரமசிவம் மற்றும் ஓட்டுநர் வெள்ளைச்சாமி ஆகியோரின்
குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் பத்மாவதிக்கு 25,000/-ரூபாயும்,
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமது அறிக்கையில்
தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment